உரிமை மறுக்கப்பட்டவர்களின் போராட்டம் பயங்கரவாதமா?
-பீட்டர் அல்போன்ஸ்
***********
நெல்லையிலிருந்து சென்னைக்கு புகை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வேத வியாக்கியானங்களில் விற்பன்னராகத் திகழ்ந்த அருமை நண்பர் ஒருவரும் என்னுடன் பயணம் செய்தார். தன்னை அறிவு ஜீவி என்று கூறிக் கொள்கின்ற அவர் தேவைக்கு அதிகமாகவே பேசக் கூடியவர். ட்ரைன் புறப்படும் நேரத்தில் ஒரு முஸ்லிம் சகோதரரும் பர்தா அணிந்த அவரது மனைவியும் நாங்கள் இருந்த பெட்டியில் வந்து ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகி விட்டது. அதிகமாக பேசக் கூடிய அந்த வேத விற்பன்னர் பேச்சை நிறுத்தி விட்டார். அதோடு, அடிக்கடி தலையைத் தடவுவார்...அண்ணாந்து பார்ப்பார்...மன அமைதி இல்லாததுபோல் தவித்தார்." உடம்புக்கு சரியில்லையா?" என்று நான் கேட்டதற்கு " அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்று கூறிவிட்டார்.
அதிகாலையில் சென்னை வந்து சேர்ந்ததும் " இரவெல்லாம் ஏன் தூங்கவில்லை?" என்று அவரிடம் கேட்டேன். "எப்படிய்யா தூக்கம் வரும்? இந்த பாயும் அவர் பொண்டாட்டியும் நம்ம கூட இருக்கும்போது தூக்கம் வருமா?" என்று திருப்பிக் கேட்டார். " ஏன் ? என்ன விஷயம்? " என்றேன். ஏதாவது பாம் வச்சு ரயிலு வெடிச்சுடுமோன்னு பயமா இருந்தது, அதனாலே ராத்திரி பூரா தூங்கமே இவங்களை வாட்ச் பண்ணிகிட்டே இருந்தேன்" என்றார் அந்த அறிவு ஜீவி. இறங்கும் போது அந்த முஸ்லிம் சகோதரர் என்னிடம், " உறவுக்காரங்க வெளிநாட்டிலிருந்து வாராங்க... அவங்களை அழச்சிட்டுபோக விமான நிலையம் போறோம்.போயிட்டு வர்றோம் அண்ணா" என்று கூறி விட்டுச் சென்றார். 'அடப்பாவி, இதை முதல்லேயே சொல்லியிருக்கக் கூடாதா?" என்று சங்கடப் பட்டார் அந்த அறிவு ஜீவி நண்பர்.
ப்ளைட்லே போகும்போது தாடி,தொப்பியோடு யாராவது ஒரு ஆள் நம் பக்கத்துலே உக்காந்தாலே, " நாம ஒழுங்கா போயி சேருவோமா"னு பயம் நிறைய பேருக்கு வந்திருக்கிறது. இப்படி ஒரு தவறான கருத்தை, இஸ்லாமிய சமூகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய அநீதி என்றுதான் நான் நினைக்கிறேன். இனம்,மதம், மொழி, நாடு என்ற எல்லைகளையெல்லாம் கடந்தது பயங்கரவாதம். எந்த ஒரு இனத்திற்கும் சொந்தமானதல்ல. அது உலகம் தழுவிய பிரச்சினை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினை. எங்கெல்லாம் பேராசை இருக்கிறதோ... எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ...எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப் படுகிறதோ...அங்கெல்லாம் பாதிக்கப் பட்டவர்களின் உரிமைக்காக வெடித்துக் கிளம்புகின்ற வன்முறைக்குத்தான் பயகரவாதம் என்று மறுபெயர் வைத்திருக்கிறோம்.
ஒரு மண் புழுவைக் கூட ஊசியால் குத்தினால் அது வாலைத் தூக்கி அடிக்கிறது. அது ஒரு புழுவாக இருந்தாலும் கூட தன்னைத் துன்புறுத்துகின்ற அந்த ஊசியை தன் உயிர் போவதற்கு முன்னால், தனது சக்தியையெல்லாம் திரட்டி , அடித்து நொறுக்கப் போராடுகிறது. அது இயலுகிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.
ஆனால்.. இந்த பயங்கர வாதத்திற்கு மாற்று மருந்து என்ன என்று கேட்டால், அந்த மாற்று மருந்து இஸ்லாம்தான். ஒரு மனிதனுக்கு மூன்று உறவுகள். ஒன்று... தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்வது. இரண்டு..தன்னை சுற்றி இருப்பவர்களோடு ஏற்படுத்திக் கொள்வது. மூன்று...அவனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு. இதில் எதில் விரிசல் வந்தாலும் அங்கே பயங்கரவாதம் தோன்றி விடுகிறது.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பயங்கரவாதம் தோன்றி இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பயங்கரவாதத்தின் காட்சிகள் நம் வீட்டிற்கே கொண்டு வந்து காட்டப் படுகிறது.
சமீபத்தில் நாம் பார்த்தது.. அமெரிக்க பயங்கரவாதம். தன்னுடைய நாட்டின் தேவைக்காக ஆப்கானிஸ்தான் மீதும்..ஈராக் மீதும் வீண் பழி சுமத்தி, அந்த நாடுகளின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்கா. ஆயிரக்கணக்கான லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதன் உச்ச கட்டமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசைனும் தூக்கிலேற்றப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் இன்று அமெரிக்காவின் பயங்கரவாதப் பிடியில் சிக்கி இருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய பயங்கரவாத நாடு அமெரிக்காதான். ஆனால்...அமெரிக்க பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுகின்ற முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவது பெரும் கொடுமை.
மதம் பயங்கரவாதம் புரிகிறதா என்று பார்த்தால்...
பயங்கரவாதம் புரியும் மதம் கிறிஸ்தவ மதமாகத்தான் இருக்க வேண்டும்.
*** சென்னையில் நடை பெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ் MLA அவர்கள் பேசியது. நன்றி..நமது முற்றம் ..ஜூலை 2007)
- Thanks to Abu Haashima Vaver for Info.