விஸ்வரூபம்: ஓதிக்கொண்டிருக்க முடியாது - A.MARX ANTHONYSAMY
=========================================
நானும் சுகுமாரனும் ஏதோ கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள்போலும் விஸ்வரூபத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விமர்சனமின்றி ஆதரிப்பது போலவும் சித்திரித்துச் சிலர் ஆலோசனை சொல்லக் கிளம்பியுள்ளனர்.
அவர்கள் நேர்மையாக எங்களின் கட்டுரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். எங்களின் பதிவுகளில் நாங்கள் இதுபோன்ற தொடர்ச்சியான, ஆம் தொடர்ச்சியான சித்திரிப்புகளால் அடிப்படையான வாழ்வாதாரங்களே பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களின் மிக நியாயமான கோபத்தின் பின்னுள்ள நியாயங்களைத் தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் எனக் கெஞ்சிக்கொண்டுதான் இருக்கிறோம். இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்களை, ஆம் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளவர்களின் குரலுக்கும் கருத்துரிமைக்க்கும் இடையில் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்கிற கேள்வியை முன்வைத்து ஒரு விவாதத்தை எழுப்புகிற முயற்சிதான் நாங்கள் செய்வது. எங்களிடம் இந்தப் பிரச்சினைக்கு முழுமையாக விடை இருக்கிறது என்பதல்ல. ஏதாவது வெளிச்சம் கிடைக்குமா என்று தேடுவதுதான் நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சி.
ஆனால் எங்களுக்கு அறிவுரை சொல்லக் கிளம்பியுள்ளவர்கள் கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் கமலஹாசனின் முயற்சிகளை விமர்சனமின்றி ஆதரிப்பதும், முஸ்லிம்களை நோக்கிக் கரிசனை காட்டுவதுபோன்ற பாவனையில் 'நீங்கள் முரட்டுத் தனமாகவும் முட்டாள்தனமாகவும் செயல்படுகிறீர்கள்' எனச் சொல்வதாகவும்தான் உள்ளது.
எங்களுக்கு எதிர்காலத்தில் சிக்கல் வரும் என்கிறார்கள். ஏதோ இப்போது சிக்கலே இல்லாமல் நாங்கள் சேயல்படுகிறோம் என்பதுபோல. முஸ்லிம்கள் எங்களுக்கு வேண்டியவர்கள் என்கிறார்கள். ரிசானா நஃபீக் மரண தண்டனைப் பிரச்சினை பற்றிய என் பதிவு குறித்து மேலப்பாளையத்தைச் சேர்ந்த முஸ்லிம் நண்பர் ஒருவர், " முஸ்லிம்களை வெளிப்படையாக எதிர்ப்பவர்களைக் கூட நம்பிவிடலாம். இப்படி ஆதரிப்பதுபோலக் காட்டிக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைகளையே விவாததுக்குரியனவாக மாற்றுகிறவன்களைத்தான் நம்பக் கூடாது" எனப் பதிவிட்டார். பழைய பதிவுகளைத் தேடிப் பாருங்கள் இதைக் காணலாம்.
நேற்று கோபால் விடுதலைக்கான ஆர்பாட்டத்திற்குப் பின் பெரம்பூர் Isllamic Foundation Trustல் நடை பெற்ற பெண்கள் மீதான வன்முறை குறித்தான ஒரு விவாதத்தில் பர்தா அணிதல், மரண தண்டனை ஆகியவற்றின் மூலம் எல்லாம் பாலியல் வன்முறைகளைக் குறைத்துவிட இயலாது என விரிவாகப் பேசினேன். அறொஞர்கள் மிகுந்த அந்த அவையில் என் கருத்துக்கள் மிகவும் பொறுமையாகக் கேட்கப்பட்டன. முனைவர் சுதேசி என்கிற பேராசிரியை இந்து மதக் கண்ணோட்டத்திலிருந்து பெண்கள் மீதான வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என விரிவாகப் பேசினார்.
ஏதோ முஸ்லிம்கள் என்றால் மாற்றுக் கருத்துக்களையே கேட்கத் தயாரில்லாதவர்கள் என்பதுபோன்ற பிம்பக் கட்டமைப்புகளைச் செய்யாதீர்கள். ரிசானா மரணதண்டனை குறித்த என் பதிவில் சவூதி அரசின் செயலை ஆதரித்த முஸ்லிம்களின் எண்ணிக்கையக் காட்டிலும் எதிர்த்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
தினசரி அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் அதில் முஸ்லிம் மற்றும் இஸ்லாம் குறித்த ஊடகச் சித்திரிப்புகளின் பங்கையும் நேரடியாக ஆய்வு செய்து வருவதனால் வெளிப்படும் கரிசனமே எங்கள் பதிவுகள்.
தடைகளைச் செய்வதுதான் ஒரே தீர்வு என நாங்கள் எங்கே சொல்லியுள்ளோம்? உங்களைப்போல தடை கூடாது, தடை கூடாது, தடை கூடாது என ஓதிக் கொண்டு மட்டுமே நாங்கள் இல்லை என்பதுதான் இந்தப் பிரச்சினையில் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்.
0 comments:
Post a Comment