அன்று!
அண்ணன் பி.ஜே பேசுகிறார் என்றால்,
எங்கிருந்தாலும் புறப்பட்டு போய்விடுவோம்.
அவரின் எழுத்துக்களை தேடிப்பிடித்து
படித்து விடுவோம்.
அவ்வப்போதைய அரசியல் சமூக அசைவுகள் குறித்து அவர் வெளிப்படுத்தும் கருத்துக்களை அறிய ஆவலுடன் அலைந்து திரிவோம்.
ஆதிக்கத்தை எதிர்த்தும், அதிகாரத்தை எச்சரித்தும் எளிய மொழியில் முழங்கும் அவரின் சொற்போரில் சொக்கிப்போவோம்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அவர் எடுத்துரைக்கும் உத்தியைக்கண்டு மகிழ்ந்தோம்.
முரட்டுக் கேள்விகளுக்கும், வறட்டு வாதங்களுக்கும் சிரித்துக் கொண்டே விடையளிக்கும் அவரின் வியூகம் கண்டு மனம் நிறைந்தோம்.
மறந்தும் கூட சுடுசொல் கூறாமல், எவரையும் சூடாக்காமல் சிந்திக்க மட்டுமே வைக்கும் அவரின் உரைகளில் நனைந்தோம்.
மாற்றாரும் ஏற்கும் வண்ணம் நளினத்தோடும், நல்லிணக்கப்பாங்கோடும் விவாதிக்கும் அவரின் ஆற்றல் கண்டு வியந்தோம்.
இன்று!
மனிதனை மிருகம் என்கிறார்.
மகளிர் நிறைந்திருக்கும் பேரவையில்,
ஜட்டி பாடி என்கிறார்.
மாற்றுக்கருத்துடையோரை இழிவான சொற்களால் அர்ச்சிக்கிறார்.
முடம் என்றும், பிண்டம் என்றும் கூறி
வசை மொழியில் கொக்கரிக்கிறார்.
ஒட்டகத்தின் குடலையே மாலையாகப் போட்ட பிறகும், எதிரிகளிடம் மென்மையாக நடந்து கொண்டார்
நபிகள் என்று,
ஒவ்வொரு கூட்டத்திலும் நமக்கு வகுப்பெடுத்தவர் இதே பி.ஜே.தான்.
மாமனிதர் நபிகள் நாயகம் என்று நூல் எழுதி, நபிகளாரின் பண்புக்கூறுகளை பட்டியலிட்டு
மனங்களை வென்றெடுத்தவர் இதே பி.ஜே.தான்.
உணர்ச்சி வயப்படாமல் அறிவு வயப்பட வேண்டுமென்று
ஊர் தோறும் இளைஞர்களை உசுப்பி எழுப்பியவர்
இதே பி.ஜே.தான்.
அப்படிப்பட்டவருக்கு இப்போது என்னவாயிற்று?
ஏன் இந்த மூர்க்கம்? எதற்காக இந்த தர்க்கம்?
இஸ்லாமிய சட்டங்களை,
முஸ்லிம்களின் செயல்பாடுகளை
கேள்வி எழுப்பவும், விமர்சிக்கவும்
எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.
அதற்கு, ஆத்திரப்படாமல் அழகிய முறையில் பதிலுரைக்கும் கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது.
மாற்றுக்கருத்துடையோரின் வாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர,
மாற்றுக்கருத்துடையோரை ஏசி, பேசி, இழித்து, பழித்து காயப்படுத்தக் கூடாது.
அவ்வாறு செய்வது,
விவாதத்தை மடை மாற்றி விடும்;
வாதங்களில் இருக்கும் நியாயங்களை
மறக்கச் செய்து விடும்;
கருத்தை விட்டுவிட்டு கருத்தாளரை நோக்கி கவனத்தை திருப்பி விடும்;
முஸ்லிம்களின் பக்கம் நிற்போரைக் கூட எதிர்முனையில் கொண்டுபோய் நிறுத்தி விடும்;
முஸ்லிம்களை தனிமைப்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு வாய்ப்பளித்து விடும்;
இஸ்லாத்தை இழிவுபடுத்த முனைவோரின் வேலையை எளிதாக்கி விடும்.
''பிறரை வீழ்த்துபவன் வீரனல்ல;
கோபம் வரும்போது தன்னை
அடக்கிக் கொள்பவனே வீரன்!'' என்று சொன்ன
நபிகளாரின் பொன்மொழியை
நினைவூட்டி முடித்துக் கொள்கிறேன்.
ஆளூர் ஷாநவாஸ்