by Marx Anthonisamy on Tuesday, January 29, 2013 at 10:50pm ·
“முஸ்லிம்களை
யார் தனிமைப்படுத்துகிறார்கள், அவர்களாகத்தான் தனிமைப்பட்டுக்
கொள்கிறார்கள்” என ஏகப்பட்ட பேர் பின்னூட்டம் இடத் தயாராக இருக்கிறார்கள்
என்பதை உணர்ந்தேதான் இதை எழுதத் துணிகிறேன்..
தொடங்கு முன் நினைவுக்கு வரும் சில சம்பவங்கள் : 1. தோழர் ரெனி அய்லின் கேரளத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மனித உரிமைச் செயலாளி. பிறப்பால் கிறிஸ்தவர். சென்ற ஆண்டு திருச்சியில் ஒர் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். எப்போது வந்தீர்கள் என்றேன்? “இரவு 12 மணிக்கு திருச்சி சந்திப்பில் இறங்கினேன். ஒரு லாட்ஜிலும் ரூம் தர மறுத்து விட்டார்கள். அடையாள அட்டையைக் காட்டியும் பயனில்லை. அவர்கள் என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்” என்று பதிலுரைத்தார். ரெனி ஒல்லியாய் உயரமாய் முகத்தில் தாடியுடன் நீண்ட குர்தா வேறு அணிந்திருப்பார். கேட்க வேண்டுமா?
2. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. இப்போது அந்த முஸ்லிம் நண்பர் ஒரு தொலைக்காட்சியில் முக்கிய செய்தியாளராக உள்ளார். எனவே பெயரைக் குறிப்பிடவில்லை. அப்போது அவர் ஒரு இளம் பத்திரிக்கையாளர். ஏதோ ஒரு வேலையாக இருவரும் என் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இரவு கவியக் கவிய அவர் அவசரப்பட்டார். வேலை முடியவில்லை. முடித்த பின் போகலாமே என்றேன். “இல்லை சார், நேரமாகிவிட்டது. வினாயகர் ஊர்வலம் அது இதுன்னு நான் ரூமுக்குப் போற வழியில்...... நான் தாடி வேற வச்சிருக்கேனா..... நாளைக்கு சீக்கிரம் ஆஃபீஸ் முடிஞ்சவுடன் வந்துடறேன்” எனச் சொல்லி நகர்ந்தார். அப்போது அவர் ராயப்பேட்டைக்கு அருகில் தங்கியிருந்தார்.
நான் மிகைப்படுத்திச் சொல்கிறேன் எனப் பல நண்பர்கள் நினைக்கக் கூடும். ஆனால் இவை இரண்டு மட்டுமல்ல இதைப்போல ஏகப்பட்ட நிகழ்வுகள், அனுபவங்கள் என்னிடம் உண்டு. உங்களுக்கெல்லாம் தெரிந்த ஒன்றை நினைவூட்டுகிறேன். அவர் இந்திய இளைஞர்கள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். இந்த நாட்டின் மிக உயரிய பதவியில் இருந்தவர். அவர் பெயர் ஒன்று போதுமானதாக இருந்தது, அவரை நிர்வாணமாக்கிச் சோதனை இடுவதற்கு. இல்லையா?
“என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்.....”
இது என்ன கொடுமை? என்ன வேதனை? ஒரு தலித் அனுபவிக்கும் இழிவையும், ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் இந்த வெறுப்பையும் ஒரு தலித்தாகவும், முஸ்லிமாகவும் இருந்துதான் புரிந்து கொள்ள இயலும். ஒரு முஸ்லிமாக இருந்து சென்னை, மும்பை போன்ற நகரங்களில் வீடு தேடிச் சலித்த அனுபவங்கள் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு? ரயிலில் பிரயாணம் செய்யும்போது ஒரு முஸ்லிம் தாடி, தொப்பி சகிதம் கையில் ஒரு சூட் கேசுடன் பக்கத்தில் ஏறி அமர்ந்தால் நம்மில் எத்தனை பேர் துணுக்குறுகிறோம்? டிசம்பர் 6 ஐ ஒட்டிப் பல முஸ்லிம்கள் ரயில், விமானப் பயணம் செய்வதில்லை தெரியுமா? அக்டோபர் மாதம் வந்தால் போதும் முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அந்த மாதம் நல்லபடியாய்க் கழிய வேண்டுமே என ஏங்கிக் கிடப்பதை நான் அறிவேன்.
இப்படியான ஒரு சூழல் உருவாகியுள்ளதில் இங்கு மேலெழுந்துள்ள இந்துத்துவ வலதுசாரி பாசிசத்திற்கு பெரும் பங்குண்டு என்பதில் அய்யமில்லை. ஆனால் இத்தகைய கருத்துக்கள் அந்த அமைப்புகளைத் தாண்டி சாதாரண மக்கள் மனத்தின் அடியாழத்திலும் போய்ப் படிந்துள்ளதில் அந்த விஷமப் பிரச்சாரங்களைக் காட்டிலும் நமது அச்சு, காட்சி மற்றும் திடைப்பட ஊடகங்களுக்கு அதிகப் பங்குண்டு.
நாடகம், திரைப்படம் ஆகியவற்றுக்கு ஒரு கலைப் படைப்பு என்பதற்கு அப்பால் அவற்றிற்கு ஒரு பிரச்சார மதிப்பும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவை மிகப் பெரிய அரசியல் மாற்றங்களுக்குக் காரணமான வரலாறுகளும் உண்டு.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நான் மிகவும் மதிக்கும் டெஹெல்கா இதழின் நிர்வாக ஆசிரியை ஷோமா சவுத்ரி, கருத்துச் சுதந்திரத்திற்கு “நியாயமான கெடுபிடிகளை” (reasonable restrictions) விதிக்கும் நமது அரசியல் சட்டத்தின் 19(2) பிரிவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அரசியல் சட்டம் புனிதமான ஒன்றல்ல. மாற்றங்கள் தேவைப்படும்போது செய்துகொள்ளப் படவேண்டும்தான். “நியாயமான கெடுபிடிகள்” என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை நாம் அரசின் கைகளில் கொடுத்துவிட இயலாதுதான். அரசின் கைகளில் இருக்கும் கெடுபிடி அதிகாரம் என்றைக்கும் மக்களுக்கு ஆபத்தானதுதான். அந்த வகையில் எனக்கு ஷோமாவின் கருத்தைக் கண்மூடி ஆதரிக்கத்தான் விருப்பம். “அதுவும் கலைப்படைப்புகளுக்கு எவ்விதக் கருத்துச் சுதந்திரத் தடையும் இருக்கக் கூடாது” என ஷோமா அடுத்து இதை வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். விஸ்வரூபத் திரைப்படப் பிரச்சினையில் கருத்துச் சுதந்திரத்தையும் கமலஹாஸனையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள் பலரும், “கலைப் படைப்புகளுக்குத் தணிக்கை கூடாது; கருத்துச் சுதந்திரத் தடை கூடாது” எனக் கூறுகிற கருத்துடன் இது ஒத்துப் போகிறது.
ஆனால் நமது தீவிரக் கருத்துச் சுதந்திர ஆதரவு நண்பர்கள் அத்தோடு நிறுத்திக் கொள்கின்றனர். ஷோமா இந்தியத் துணைக் கண்டத்து மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வரும் ஒரு இதழாளரும் கூட. அவரால் அத்தோடு நிறுத்திக் கொண்டு போய்விட இயலவில்லை. “ஆனால் மேடைப் பேச்சு போன்ற பொதுச் சொல்லாடல்களில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பதற்கு இடமில்லை” என்றார். தொகாடியா, உமாபாரதி வகையறாக்களின் மேடைப் பேச்சுக்களின் உடனடி விளைவுகளை ஒரு இதழாசிரியரால் எப்படி மறக்க இயலும்?
பார்வையாளருள் ஒருவராக இருந்த திரைப் பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தார், “கருத்துச் சுதந்திரத்திற்கான எல்லையை எவ்வாறு வரையறுப்பது? பொதுப் பேச்சுக்களில் கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லை விதிக்கலாம் என்றால் பின், முழுமையான கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லை என்கிற இடத்திற்குத்தானே திரும்பி வருகிறோம்?” என்று கேட்டபோது ஷோமா இப்படிப் பதிலளித்தார்; “தகவல் அடிப்படையில் பொய்யாக இருக்கிற, வன்முறைகளைத் தூண்டுகிற கருத்து வெளிப்பாட்டு முறைகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலும்”
அதாவது மேடைப் பேச்சு முதலியவற்றில் பொதிந்துள்ள இத்தகைய வன்முறைகள் உடனடி விளைவை ஏற்படுத்திவிடும் என ஷோமா கருதுவது புரிகிறது. அவர் அடுத்துச் சொல்லியுள்ள எடுத்துக்காட்டு அதை உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில் இணையத்தளம் “மற்றும் பிற தொடர்பூடகச் சாதனங்களின்” மூலம் பரப்பப்பட்ட தவறான தகவல்களின் விளைவாக அசாமிலிருந்தும் பிற வட மாநிலங்களிலிருந்தும் வந்து பிற மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தோர் ஓட நேர்ந்ததை அவர் எடுத்துக் காட்டினார்.
ஆக இதுபோன்ற “உடனடி” வன்முறைகளைத் தூண்டக் கூடிய வெளிப்பாடுகள் அவை எந்த ஊடகமாக இருந்தபோதிலும், அவை கலைப் படைப்பு என்கிற போர்வைக்குள்ளிருந்து வெளிப்பட்டபோதிலும் அவற்றிற்கு முழுச் சுதந்திரத்தை அளித்துவிட இயலாது என்பதுதான் அவரது கருத்து என்றே நாம் புரிந்து கொள்கிறோம். கலைப்படைப்புகள் இப்படி உடனடி வன்முறைக்கு வித்திடாது என அவர் நம்புகிறார்.
சரி அப்படி “உடனடி” வன்முறைகளுக்கு வித்திடாமல், தொலை நோக்கில் நிரந்தரமான ஒரு வெறுப்பையும் சந்தேகத்தையும் பிறர் மீது உருவாக்கும் வெளிப்பாடுகளை முழுமையான கருத்துச் சுதந்திரம் என விட்டுவிட இயலுமா? நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட அனுபவங்கள் எல்லாம் இப்படியான வெறுப்பூட்டல்களின் விளைவுதானே?
ஷோமா அத்தோடு நிறுத்தவில்லை. முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லியுள்ளார்: “பிறரைக் காயப்படுத்தும் உரிமையைச் சமூகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. பொதுமக்கள் கருத்து அல்லது அரசியல் கறார்த் தன்மை என்கிற பெயரில் இந்த உரிமையை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது”.
“பிறரைக் காயப்படுத்தும் உரிமை”- ஆகா, ஷோமா நம் சிந்தனைக்கு மிகப் பெரிய ஒரு கருப் பொருள் ஒன்றைக் கையளித்துச் சென்றுவிட்டார். நம் சிந்தனைத் திறனை முழுமையாகக் கசக்கிப் பிழிந்து யோசிக்க வேண்டியதுதான்.
“காயப்படுத்தும் உரிமை” (right to offend others) என்பதன் மூலம் அவர் கருத்து ரீதியான காயப்படுத்தலைத்தான் சொல்கிறார். ஆனால் “பிறர்” என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்வது. “பிறரது” எல்லாக் கருத்துக்கள் மீதும் நமக்கு விமர்சிப்பதற்கு உரிமை உண்டு என்கிற அளவில் மட்டுமே நாம் இதை ஏற்றுக்கொள்ள இயலும். எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் பெரும்பான்மையையும் சிறுபான்மையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதையும், சிறுபான்மைக்குச் சில சிறப்புப் பாதுகாப்புகள் அளிக்கப்படவேண்டும் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது.
ஆக, ஷோமா இறுக்கமாகவும் தெளிவாகவும் கருத்துச் சுதந்திரம் பற்றிய தனது கருத்தைக் கூறியிருப்பதுபோல மேலோட்டமாகத் தோன்றினாலும், ஒரு பத்திரிக்கையாளர் என்கிற வகையில் இன்றைய எதார்த்ததின் நியாயங்களிலிருந்து அவரால் தப்ப இயலவில்லை என்பதுதான் உண்மை. பாசிசம் தலை எடுக்கும் சூழலில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவிற்குப் “புரட்சிகரமான” கருத்தாக இருக்கும் என எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இந்த விஷயத்தில் புரியவில்லை எனச் சொல்வதில் எனக்கு வெட்கமுமில்லை.
கருத்துச் சுதந்திரம் குறித்த இந்த விவாதம் புதிதான ஒன்றில்லை. நீண்ட வரலாறுடைய விவாதங்களில் ஒன்று இது. இந்த விவாதத்தில் இப்படி அல்லது அப்படி என இதுவரை முடிவு வந்ததுமில்லை.
இன்று முழுமையான கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிற நண்பர்கள் பலரும் இப்படியான பிரச்சினைகள் வரும்போது எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன். இன்று விஸ்வரூபப் பிரச்சினையில் முழுக் கருத்துச் சுதந்திரம் குறித்து முழங்கியுள்ள ஒருவர் ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அவரது மாத இதழில் நான் எழுதி வந்தபோது ஒரு கட்டுரையில் சுஜாதா குறித்து எழுதிய சில வரிகளை என்னைக் கேட்காமலேயே வெட்டியவர். செய்தியறிந்த நான் அக்கட்டுரையைத் தணிக்கை செய்து வெளியிடுவதை மறுத்துத் திரும்பப் பெற்றதோடு அதில் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டேன். முழு வணிகரான அவர் இன்று முழுக் கருத்துச் சுதந்திரம் குறித்துக் கதையாடும்போது சிரிக்காமல் என்ன செய்வது?
ஒரு நண்பர் ஒரு கதை அல்லது ஒரு கவிதை எழுதுகிறார். அது அவரது கருத்துச் சுதந்திரம். அது என்னைப் பாதிக்கிறது என நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எனது கருத்துச் சுதந்திரம். இதை நாம் ஏற்க வேண்டும். ஆனால் இன்று கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் அரசின் தடையை எதிர்ப்பதாக இருப்பதைக் காட்டிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பை விமர்சிப்பதகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்கள் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிக்கிறது.
இறுதியாக:
சரி, இப்படியான சூழலில் அரசுக்குத் தலையிடும் உரிமை உள்ளதா இல்லையா? இல்லை எனச் சொல்லி நான் என்னை எளிதாகப் புர்ட்சியாளனாகக் காடிக்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் அரசுக்கு ஒரு பொறுப்பு உண்டு என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அரசு இப்படியான பிரச்சினைகளில் முற்று முழுதான அதிகாரமாக அதைக் கைக் கொள்ளமல் இன்னும் விசாலமான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் அடங்கிய குழுவிடம் கையளிக்க வேண்டும். அந்தக் குழுமட்டும் சரியாகச் செயல்பட்டுவிடுமா? அரசால் அமைக்கப்படும் அந்தக் குழுவே அரசின் கைப்பாவையாகத்தானே இருக்க முடியும்? என்கிற கேள்விகள் இயல்புதான். அப்படியாகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அதையும் எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும். போராட்டங்களுக்கு முடிவு ஏது?. தெரிதா சொன்னதுபோல ஜனநாயகம் என்பது என்றைக்கும் வந்து முடிந்துவிடுகிற விஷயமல்ல. ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம் மட்டுமே. ஒரு தேவதூதனின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல நாம் ஜனநாயகத்திற்காகவும் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்தக் காத்திருப்பின் வடிவம் கையாலாகாத்தனமல்ல. போராட்டம்தான்.
அடுத்த கேள்வி: இப்படியான எதிர்ப்பை இனி இந்துத்துவ சக்திகளும் கலைப் படைப்புகளுக்கு எதிராக மேற்கொள்வார்கள் தானே? “இனி” என்ன, இப்போதும் நடந்து கொண்டுதானே உள்ளது. நேரடியாக எதிர்த்து முடக்குவது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இந்துத்துவ எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு எல்லோரும் சுய தணிக்கையுடன்தானே தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
பெர்னாட்ஷா (பெர்னாட்ஷாதானே?) ஒருமுறை சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “நீ உன் கைத்தடியைத் தெருவில் நின்று கொண்டு சுழற்றுவதற்கு உனக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அந்த உரிமை என் மூக்கு நுனி வரைதான் என்பதை நினைவிற் கொள்”.

0 comments:
Post a Comment