f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:45 AM
முஸ்லிம்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை இல்லை.?

கேள்வி : சகோதரர் முருகன் சிதம்பரம்

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக, விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருவது நியாயமா ? முஸ்லிம்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை இல்லை.....???

பதில் :

கருத்துச் சுதந்திரம் எதுவரை ? யாருக்கு..? இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கிறோம்.

இந்தியாவில் சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக் எதையும் செய்யலாம் எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு எதிராகப் பரப்பப்படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் கருத்துச் சுதந்திரம் போச்சே எனக் கூப்பாடு போடுகிறார்கள்.

முஸ்லிம்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை, ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்குக் கருத்துச் சுதந்திரம் கிடையாதா என வினா எழுப்பும் நாம், நம் முதுகைப் பார்ப்பதில்லை. மிக அண்மையில் நாம்தானே டாம்999 திரைப்படத்துக்கு எதிராகப் போராடி அப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட முடியாமல் செய்தோம். வாட்டர் திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவித்தோம் ? சகிப்புத் தன்மையோ கருத்துச் சுதந்திரமோ நமக்குப் பொருந்தாது அல்லவா ?

டாவின்சி கோட், தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட் போன்றவற்றுக்கும் எதிராகப் போராட்டம் நடந்ததே ? ஓவியர் உசேன் இந்து தெய்வங்களை இழிவு செய்து விட்டார் என்று சொல்லி அவரது ஆர்ட் காலரியைச் சிதைத்தது சகிப்புத் தன்மையாலா அல்லது கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாலா ?

இந்தி நடிகர் ஃபெரோஸ்கான் திப்புசுல்தானின் வாள் என்ற தொலைக்காட்சித் தொடரை எடுத்து வெளியிட்ட போது, அதற்கு எத்தனை இடையூறுகள் ? நம் நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட மன்னனின் வரலாற்றைச் சொல்லக்கூட விடாமல் இடையூறு செய்து கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்கள், பிறருக்குக் கருத்துச் சுதந்திரம் பற்றி அறிவுரை கூறுகிறார்கள்.

நம் தளத்தில் ரஸ்ஸல் எழுதி வெளியான அலசலில் இருந்து ஒரு பகுதி கீழே:--

தனது காவிச்சாயம் கலையாமல் காத்துக் கொள்ளும் பால்தாக்கரேயும் சிவசேனாவும் கருத்துச் சுதந்திரம் என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தம், யாரைப்பற்றியும் எதையும் பேசலாம், எழுதலாம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவதை அவர்களது பேச்சுக்களும் எழுத்துக்களும் நிரூபித்து வந்துள்ளன! ஆனால் பால்தாக்கரேய்க்கோ சிவசேனாவுக்கோ எதிராக யாராவது பேசினாலோ எழுதினாலோ, கருத்துச் சுதந்திரம், ஊடக உரிமை என்பவையெல்லாம் மறந்துவிடும் சிவசேனிகர் பேசியவர், எழுதியவர் மீது கடும் தாக்குதலைத் தொடுப்பர்.!

மகாராஷ்டிர மாநில அரசு, பாபாசாகிப் அம்பேத்கரின் நூல்களை வெளியிடும் திட்டத்தில், Riddles in Hinduism எனும் அம்பேத்கரின் ஆக்கத்தை வெளியிட்டது. உடனே சிவசேனா களத்தில் இறங்கியது. அம்பேத்கரின் நூல் இந்து மதத்தையும் இந்துக் கடவுளரையும் அவமதிப்பதாகக் கூறி, உடனே அந்நூலைத் தடை செய்யுமாறு பெரும் கண்டனப் பேரணியை நடத்திய சிவசேனா, அம்பேத்கரையும் தலித்களையும் இழிவுபடுத்திப் பேசிக் கருத்துச் சுதந்திரத்துக்கு மரியாதை (!) செலுத்தியது..

தனக்கு எதிரான விமர்சனங்களையோ கருத்துகளையோ பொறுத்துக் கொள்ளாத சிவசேனா, மம்ரிக் மற்றும் சாம்னா இதழ்கள் மூலம் பத்திரிகையாளார்கள் மீது எழுத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தாலும் நேரடியாக அவர்களைத் தாக்குவதற்கும் தயங்கியதில்லை.

மும்பையின் வாங்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட இருந்த கிரிக்கெட் திடலை சிவசேனாக் குரங்குப்படை குழிகளைத் தோண்டிச் சேதப்படுத்தியது. இதைக் கண்டித்து கடுமையான தலையங்கம் எழுதிய மகாநகர் எனும் மராத்தி மொழி இதழின் அலுவலகத்தைத் தாக்கியது சிவசேனா! பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அராஜகத் தாக்குதலைக் கண்டித்துப் பத்திரிகையாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் சிவசைனிகர் கல்வீச்சு நடத்தியும் இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியும் பத்திரிகையாளர்களைக் காயப்படுத்தினர். அவர்களுள் மணிமாலா என்ற ஒரு பெண் பத்திரிகையாளாரின் தலையில் இரும்புத் தடியால் அடித்து அவரது மண்டை ஓட்டைச் சிதைத்தனர். சிவசேனாவின் ரவுடித்தனத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்டித்த பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பற்றித் தன் பத்திரிகையில் மிக இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதியதோடு மட்டுமின்றிப் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று தலையங்கமும் தீட்டி மகிழ்ந்தது சிவசேனா.

இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் மகாநகர் இதழ் ஆசிரியரைத் தாக்கினர் சிவசைனிகர். அடுத்த ஆறு மாதத்திற்குள் பால்தாக்கரேயின் நேரடிக் கண்காணிப்பில் பத்திரிகையாளர்கள் பன்னிருவர் தாக்கப்பட்டனர். தொடர்ந்து மராத்தி மொழியில் அதிகமாக விற்பனையாகும் பத்திரிகையான லோக்மத் இதழின் அலுவலகத்தையும் சிவசேனாவினர் சூறையாடிக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தனர்.

நான் ஓர் இந்தியன் என்று சொல்லும் சுதந்திரத்தைக்கூட மறுக்கும் கேவலமான பிறவி பால்தாக்கரே! கிரிக்கெட் வீரர் சச்சின், நான் ஓர் இந்தியன், மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்று கருத்துக் கூறியதற்காக மராத்தியர்களின் மனம் என்னும் பிட்சில் சச்சின் ரன் அவுட் ஆகிவிட்டார் என்றும் அவர் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், அரசியல் விளையாட்டில் அவர் ஈடுபடுவது சரியில்லை என்றும் பால்தாக்கரே சாம்னா இதழில் தலையங்கத்தில் சச்சினைச் சாடிக் கடுமையாக எழுதியிருந்தார்.

தனி நபர் தம் வாழ்க்கைத் துணையைத் தேடும் விஷயத்தில் கூட பிறரின் உரிமையை விமர்சிப்பது இன்னும் கேவலமானது! இந்தியாவின் டென்னிஸ் தாரகை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மணம் செய்து கொண்டதற்குக் கூட எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர் சிவசைனிகர்.

பாட்டன் பால்தாக்கரேயைப் போலவே கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்காதவர் ஆதித்ய தாக்கரே! அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜேம்ஸ் லாயின் (James W. Laine) என்பவர் எழுதிய Shivaji: Hindu King in Islamic India என்ற நூலைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்ன தாத்தா பால்தாக்கரேவின் வழியில், ரோஹிந்தன் மிஸ்த்ரி (Rohinton Mistry) எழுதிய Such a Long Journy எனும் நாவலை சிவசேனாவின் மாணவர் பிரிவான பாரதீய வித்யார்த்தி சேனா மூலம் எரித்தார் ஆதித்யதாக்கரே!

(ரோஹிந்தனின் அதிர்ஸ்டம், அவர் கனடாவில் இருக்கிறார், இங்கே இருந்திருப்பார் எனில் அவரையும் கொளுத்தியிருப்போம் என்று பாரதீய வித்யார்த்தி சேனாவின் அங்கமான ஒருவன் டி.வி. கேமிராவின் முன் தைரியமாகச் சொன்னான்) மும்பைப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து ரோஹிந்தன் மிஸ்த்ரியின் நாவலை அகற்றும் படி, இருபத்து நான்கு மணி நேரக் காலக்கெடு கொடுத்து ஆதித்ய தாக்கரே நடத்திய அதிரடிப் போராட்டமும் அதற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிந்ததும் ஆதித்யாவைச் சிவசேனாவின் இளைஞர் அணியின் தலைவர் பொறுப்புக்குப் பால்தாக்கரே நியமித்ததன் பின்னணியாக இருக்கலாம்.

இதேபோல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இவ்வாண்டுப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த நோன்பு எனும் கதைக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆண்டாள் பற்றிக் கதாசிரியர் செல்வராஜ் கற்பனை செய்து எழுதியிருந்தது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக எதிர்ப்பு எழுந்தது, போராட்டங்களும் நடந்தன.

தி.மு.க.வில் யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்ட தி.மு.க. சார்பான பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கி மூன்று அப்பாவிகளை எரித்துக் கொன்று கருத்துச் சுதந்திரத்தைப் பேணிய கட்சியும், ப்ளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தம் தலைவிக்கு எதிராக நீதிபதி தீர்ப்பு வழங்கியதற்காக மூன்று அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்று நீதிச் சுதந்திரத்தைப் பேணிய கட்சியும் மாறி மாறி ஆளும் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசலாமா ?

இவ்வாறு கருத்துச் சுதந்திரத்துக்கு நாம் மதிப்பளிக்கும் போது மற்றவர்களைப் பற்றிக் குறை கூற நமக்கு உரிமை இல்லை.

கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்கும் காவி கூட்டம் அவர்களை பற்றி நாம் விமர்சிக்க அனுமதிக்கிறதா என்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது,

நம்முடைய இந்த பதில் சகோதரர் சுரேஷ் குமார் அவர்களுக்கு நிறைவை தரும் என்ற நிம்மதியுடன் கூப்பாடு போட்ட பாரதிராஜா, ரமேஷ் கண்ணா, விக்ரமன், பார்த்திபன், அஜித் உள்ளிட்ட அரிதாரம் பூசிய கூட்டத்திற்கும் ராமதாஸ், தா.பாண்டியன், இல.கணேசன் உள்ளிட்ட அரசியல் மேதைகளுக்கும் இந்த பதில் சென்றடையும் என்று மனநிறைவோடு முடிக்கிறேன்

0 comments:

Post a Comment