நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல். ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத் தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.
தாலிபான்கள் உருவானதில் அமெரிக்காவில் அரசியல் லாபம் குறித்தோ , அமெரிக்காவின் தீவிரமான பெட்ரோல் திருட்டு குறித்தோ எவ்வித விமர்சனமும் இல்லாமல், இஸ்லாமியன் என்பவன் தீவிரவாதி என்ற பிம்பத்தை உலகம் முழுக்கவும் மக்கள் மனதில் ஏற்றி வைக்க அமெரிக்க இயக்குனர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதில் ஒரு அரசியல் லாபம் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் உட்கார்ந்துகொண்டு இட்டிலி தோசை திண்ணும் உனக்கு ஏன் அத்தகைய ஒருதலை பட்ச பார்வை என்பதைத்தான் கமலை நோக்கி நாம் கேட்க வேண்டியுள்ளது.
அவர் ஊரில் தலித் மக்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து கேள்வி எழுப்ப அவருக்கு வக்கில்லை. அவர் மொழி பேசும் தமிழீல மக்களுக்கு இராணுவமும் புலிகளும் மாறி மாறி செய்த கொடுமைகளை விமர்சிக்கத் துப்பில்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதை பெற இப்படியா அவன் மூத்திரத்தைக் கமல் குடிக்க வேண்டும். கடைசியாக ஒரு ஆங்கிலப் படம் இயக்கவும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. எப்படியோ எதிரிக்கு எதிரி நண்பர்களாகிவிட்டீர்கள்.
அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேலையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”
அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். தங்க கூடம் என்றால் மலம் என்ன மணக்கவா செய்யும்.
இப்படி, ஒரு எரிச்சலான மன நிலையுடன் இருக்கும் போது சிவா பெரியண்ணன் ஒரு யூ டியூப்பை அனுப்பி வைத்தார். ஜூலை 2012 -இல் பதிவிடப்பட்ட ஒன்றை இப்போதுதான் சிவா கண்டெடுத்து அனுப்பியதில் ஏதோ காரணம் இருக்கும் என பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது பேசுவதைக் கேட்காமல் இருக்க முடியுமா என்ன? கடந்த ஆண்டு பிரான்ஸ் சென்றவர் அப்படியே லண்டனுக்குள் நுழைந்து ‘தீபம்’ தொலைக்காட்சியில் இளைய அப்துல்லாவோடு கலந்துரையாடியுள்ளார் என்றால் பல அறிய பெரிய தகவல்களைச் சொல்வார் என்ற ஆவலில்தான் பார்க்கத்தொடங்கினேன்.
சை.பீர் என்ன சும்மாவா? மலேசியத் தமிழர் வரலாறு குறித்தெல்லாம் பட்டியல் போட்டு சொன்னார். அப்புறம் சில கேள்விகளுக்கு சமரசமே இல்லாமல் கருத்துகளைத் தெரிவித்ததைப் பாராட்டலாம்.
சாதி குறித்து கேட்டபோது, மலேசியாவில் சாதி இன்றளவும் இருப்பதை ஒப்புக்கொண்டார். அதே போல மலேசிய தமிழர்களைச் சரியாக வழிநடத்தக்கூடிய தலைவர்கள் இன்றளவும் மலேசியாவில் இல்லை (சை.பீர் நூல் வெளியீடுகளுக்கு வந்து பணம் கொடுக்கும் அமைச்சர்கள் உட்பட)என பகிரங்கமாகக் கூறினார். பூமி புத்ரா அந்தஸ்து இன்றளவும் அகற்றப்படாமல் இருக்கும் கொடுமையை எடுத்துரைத்தார். (சக்தி அறவாரியத்தில் நூல் வெளியீட்டில் பிரதமரை அழைத்து மாலையெல்லாம் போட்டபோது அப்படியே ஓரமாகப் போய் அதை அவர் காதில் சொல்லிவிட்டு வந்திருக்கலாம்). தமிழர்களுக்குக் குடியுறிமை இல்லாத சிக்கலைப் பேசியிருக்கிறார். தமிழ்ப்பத்திரிகைகள் எழுத்தாளர்களைச் சுரண்டுவதை வாதிடுகிறார்.(நீங்கள் கொஞ்ச காலம் பணியாற்றிய நம்நாடு ஞாயிறு இதழில் எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுத்தீர்களா?) அதோடு எழுத்தாளர் சங்கம் பயண நிறுவனமாக மாறியுள்ளதையும் விமர்சித்திருக்கிறார்… இப்படி நிறைய விசயங்களை லண்டனில் சென்றாவது அவர் மனம் திறந்து பேசியதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆனால் அரை நூற்றாண்டுக்கு மேல் இலக்கியத்தில் இயங்கும் அவரால் எவ்வளவுதான் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க முடியும். அதனால் பேட்டியின் பிற்பகுதியில் தனது வழக்கமான குசும்பைக் காட்டத் தொடங்கிவிட்டார். அவர் நலன் கருதி பலவற்றை நினைவுக்குக் கொண்டு வரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
முதலில் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் திடீரென வந்தார்கள். ஆனால், அவர்கள் சண்டையிடவே விரும்பினார்கள். வயதும் இவர்களைவிட நான் பெரியவன் என்ற ஆணவமும் அதற்கு ஆதாரமாக இருந்தது எனக்கூறியிருந்தார். லண்டன் குளிரில் அவர் நா குழறி அப்படி சொல்லியிருக்கலாம்.
வல்லினம் இலக்கியம் வளர்க்க உருவான இதழ் அல்ல. எப்போதும் சொல்வது போல நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை உருவாக்கி நாம் எதையும் கிழிக்கப் போவதில்லை. இதற்கு முன் உருவான எழுத்தாளர்கள் அதிகாரத்திடம் சோரம் போவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல்தான் எங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளோம். அதிகாரத்துக்கு எதிரான செயல்பாட்டாளராக இல்லாமல் எவ்வித மாற்றுச் சிந்தனையையும் இளம் தலைமுறையிடம் புகுத்திவிட முடியாது. எனவே சுதந்திரமான மாற்றுக்கருத்தின் தளமாகவே வல்லினம் இயங்கியது; இயங்கும். இலக்கியமும் ஏனைய கலை வடிவங்களும் அந்த அரசியலை பேச ஒரு வடிவம். அவ்வளவே.
இரண்டாவதாக நீங்கள் எங்கள் தோள்களில் தட்டிக்கொடுத்து எழுதுங்கள் எனக்கூற விரும்பியதாகவும் நாங்கள் உங்களையே விமர்சித்ததாகவும் கூறியுள்ளார்.
தட்டிக்கொடுப்பதில் தவறல்ல. தட்டிக்கொடுப்பது யார் என்பதில்தான் பிரச்னை. ஏன் எனக்கென்ன என்கிறீர்களா? அதற்கு பதில் மூன்றாவதில் இருக்கிறது.
மூன்றாவதாக சை.பீரை நாங்கள் விமர்சிக்கக் காரணம் என்ன என்று இளைய அப்துல்லா கேட்டபோது அவர் தடுமாறியிருப்பார். இளைய அப்துல்லா பற்றி அவருக்குத் தெரிந்திருக்காது. குசும்புக்காரர். இங்கு சை.பீர் அடித்த அந்தர பல்டியையெல்லாம் அறிந்தவர். பாவம் சை.பீருக்கு அது தெரியாமல் ‘நாங்கள் பழைய ஆட்கள் அதனால் விமர்சிக்கிறார்கள் எனக்கூறி , ‘பழைய ஆள் புதிய சமையல் செய்ய முடியாதா?’ என வேறு தத்துவமெல்லாம் சொல்கிறார். வேறு வழியே இல்லாமல் நான் அந்த பழைய கசப்பை சை.பீருக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது.
சாமிவேலு ஒரு நெருப்பு , அவர் ஒரு வற்றாத நதி.
சாமிவேலு வந்த பிறகுதான் எழுத்தாளர்கள் பெருமையோடு வாழ்கிறார்கள்.
சாமிவேலுவிற்கு எழுத்தாளர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
இதை சை.பீருக்கு எங்கோ கேட்ட மாதிரி இருக்கலாம். 2009 ஆம் ஆண்டில் நடந்த உங்கள் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள்தான் இவை. 3 வருடங்களில் மறப்பது இயல்புதான். மற்ற எல்லாவற்றையும் மன்னித்துவிடலாம், ஓர் எழுத்தாளன் சாமிவேலு போன்ற ஒரு அதிகார நாற்காலியிடம் நன்றிக்கடனோடு இருக்க வேண்டும் என அவர் சொல்லும் போது … கேட்டுக்கொண்டிருந்த எங்களை கேனையன் எனவா நினைத்தார். “நான் அதிகாரத்தின் முன் குனிந்தேன்… அவர்கள் குத்திவிட்டார்கள்” எனச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். இல்லை இளைய அப்துல்லாவிடம் ரகசியமாக கண்ணைக் காட்டியிருந்தால் புரிந்துகொண்டு இடைவேளையாவது விட்டிருப்பார். இதில் எல்லோரிடமும் முரண்படுவதாக வேறு வருத்தப்பட்டுள்ளார்.
அங்கிள்… ஒன்று மட்டும் சொல்கிறேன்… நான் அல்லது நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் முரண்படுவோம்… அதன் மூலமே எங்களுக்கு நாங்களே முரணாக இல்லாமல் இயங்க முடியும்.
நான்காவதாக, அப்புறம் அவர் பேட்டி வல்லினம் குறித்து செல்கிறது. ‘வல்லினத்தை நாங்களெல்லாம் பணம் போட்டு செய்தோம் ‘ என இரு முறை சொல்கிறார். அதை சொல்லும் போது இளைய அப்துல்லா அவருக்கு ஏதும் மயக்க பானம் கொடுத்திருக்கலாம். அவ்வளவு குழப்பம். எனவே அதை இப்போது தெளிவாக்கி விடலாம்.
இந்த ‘நாங்கள்’ என்பதின் அர்த்தம் 24 பேர். அதில் மூன்றாவது இதழில் இணைந்து கொண்டவர் சை பீர்முகம்மது. முதல் மற்றும் இரண்டாவது இதழில் எவ்வித பண உதவியும் அவர் வழங்கவில்லை. 24 பேர் நூறு ரிங்கிட் கொடுப்பார்கள். அந்த வகையில் அவரும் 100 ரிங்கிட் கொடுப்பார். புத்தகம் அச்சானப்பின் 100 ரிங்கிட்டுக்கான பிரதிகளைப் பெற்றுக்கொண்டு இதழை விற்று கொடுத்தப் பணத்தை மீட்டுக்கொள்வார். இந்த நூறு ரிங்கிட்டும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வாங்கப்பட்டது. காரணம் வல்லினம் அப்போது காலாண்டிதழ்.அவர் சாமிவேலுவுக்கு எழுத்தாளன் கடமை பட்டிருக்க வேண்டும் எனச்சொன்ன அந்த நிமிடம் முதல் அவரிடம் இதழுக்கான பணத்தை வாங்கவில்லை. மேலும் காலாண்டிதழாக இருந்த வல்லினத்தை மாத இதழாகக் கொண்டு வரவும் உலகம் முழுக்க அதன் வாசகர் பரப்புக்குக் கொண்டுச்செல்லவும் இணைய இதழாக வல்லினம் உருவானது. அதன் முதல் இதழில்தான் அவரின் ‘நூல் வெளியீட்டு’ கதையும் உள்ளது. அப்புறம் ஒரு சின்ன திருத்தம். வல்லினம் அச்சு இதழாக வருவது நின்றபோது அதன் விற்பனை எண்ணிக்கை 1000.
முதல் வல்லினம்: http://www.vallinam.com.my/
இறுதியாக, ‘ஒரு போராளி துரோகியான கதை’ எனும் காலச்சுவடு கட்டுரை சர்ச்சையானதையும் ஷோபா சக்தி உங்களை ‘பன்னாடை’ எனத் திட்டியதையும் சொல்லும்போது, நான் உங்கள் கட்டுரையை வல்லினத்தில் பிரசுரித்தப்பின்பே ஷோபா அதை படித்து உங்களைத் திட்டி எழுதினார் என்றிருக்கிறீர்கள். அங்கிள்… அந்தக் கட்டுரையில் வரலாற்றுப் பிழை செய்தது போல இப்பவும் செய்கிறீர்களே. அப்போது வல்லினம் இணைய இதழே இல்லை. ‘அஞ்சடி’ என்ற எனது புளோக்கில் ஷோபா உங்களை விமர்சித்து எழுதிய கட்டுரையைத்தான் நான் பிரசுரித்திருந்தேன். வல்லினத்தில் உடனே பிரசுரிக்க நீங்கள் எழுதியது அவ்வளவு தரமான கட்டுரையா என்ன? பார்த்து அங்கிள் ஷோபா சக்திக்கு உங்களைவிட அதிகமாகத் தமிழ் தெரியும் புதிதாக ஏதும் சொல்லி திட்டிவிடப்போகிறார்.
கமலஹாசன் கொடுத்த எரிச்சலை சை.பீரின் இந்த சில்மிஷம்தான் கொஞ்சம் குறைந்துள்ளது. அதற்காக சிவாவுக்கும் இளைய அப்துல்லாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், கமலையும் சை.பீரையும் பற்றி யோசிக்கும் போது உலகம் முழுக்க உள்ள உலக நாயகர்கள் ஏன் பன்னாடைகளாகவே உள்ளனர் என்பதுதான் புரியவில்லை.
லிங்க் : https://www.youtube.com/
http://vallinam.com.my/navin/
0 comments:
Post a Comment